போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஆசாமி!

புதிதாக தொழில் நிறுவனம் தொடங்குவதாக போலியாக ஆன்லைனில் வேலைவாய்ப்பு விளம்பரம் கொடுத்து, அதை நம்பிய பெண் ஒருவரை, பாலியல் வன்புணர்வு செய்த நபர், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாகவே வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. ஆனால் பெருந்தொற்று பரவலால் பலருக்கும் வேலை பறிபோன பின்னர் வேலைவாய்ப்பு என்பது சாதாரண ஒன்று கிடையாது. ஆனால் தற்போதெல்லாம் விளம்பரங்கள் கொடுத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்கள் அதீத கவனத்துடன் இருந்தாக வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக போலி விளம்பரத்தை நம்பிச் சென்ற பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதுடன், அவரின் அந்தரங்க புகைப்படங்களையும் எடுத்து வைத்து ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கேரளாவின் பல்குளங்கரா அருகே மனவா நகரைச் சேர்ந்தவர் ரெஞ்சித் சந்திரன். இவர் வேலைக்கு ஆள்தேவை என ஆன்லைனில்
போலியாக விளம்பரம் தந்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பிய பெண் ஒருவர் சந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாகவும், அம்புஜா ஹோம்ஸ் என்ற நிறுவனத்தை தனது உறவினருடன் இணைந்து தொடங்க இருப்பதாகவும், அதன் நிர்வாகத்தை நான் தான் பார்க்க இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அந்த பெண்ணின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை தெரிந்து கொண்டதுடன், அவரின் தினசரி செயல்களையும் கண்காணித்து வந்திருக்கிறார் சந்திரன். கடந்த மே 11ம் தேதி அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, திடீரென அங்கு சென்று அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.
மேலும், அப்போது அப்பெண்ணின் நிர்வாண அந்தரங்க புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனக்கு வீடியோ கால்கள் செய்ய வேண்டும் எனவும் அவ்வப்போது தனது ஆசையை தீர்க்க வேண்டும் எனவும் மிரட்டி வந்துள்ளார். அப்படி செய்யாவிட்டால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அந்த நபரின் அட்டகாசம் மோசமாகவே காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளித்திருக்கிறார் அப்பெண். இரண்டே நாட்களில் அவரை கைது செய்த பின்னர், மேலும் சிலர் அந்த நபர் தங்களிடம் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ரிஜிஸ்ரிரேஷன் என்ற பெயரில் 500, 1000 ரூபாய் என வசூலித்ததாக புகார் அளித்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்திருக்கின்றனர் காவல்துறையினர். இதுபோன்ற போலிகளிடம் பெண்களும், வேலை தேடுவோரும் கவனமாக இருக்க வேண்டும்..!