யூன் 22 : பார்பறோசா படை நடவடிக்கையும், யுத்தத்தை வெறுக்கும் யாவரும் நினைவுகூர வேண்டிய நாளும் : சண் தவராஜா
நாட்காட்டியில் விசேட கவனத்தைப் பெறும் சில நாட்கள் , உலக அரசியலைப் பொறுத்தவரை உள்ளன. அத்தகைய நாட்களுள் ஒன்று யூன் மாதம் 22 ஆம் திகதி.
ஐரோப்பிய நேரப்படி அன்றைய நாள் காலை 3 மணியளவில் உலகின் மிகப்பெரும் படை நடவடிக்கைகளுள் ஒன்றான சோவியத் ஒன்றியத்தின் மீதான யேர்மன் படையெடுப்பு நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க அன்றைய நாள் தொடர்பில் யேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இருந்து வெளிவரும் ‘டி சைற்'(நேரம்) என்ற பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வரைந்துள்ள ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின், ஐரோப்பாவை விடுதலை செய்வதில் பெரும் பங்காற்றிய முன்னைநாள் சோவியத் ஒன்றியப் படையினரின் வீரத்தைப் பாரட்டியுள்ளார்.
“சோவியத் படையினர் தனியே தமது தாய்நாட்டை மட்டும் காப்பாற்றவில்லை, ஐரோப்பாவையும், ஒட்டுமொத்த உலகத்தையும் கூட அடிமைத்தளையில் இருந்து விடுவித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“பொது எதிரியான நாசி யேர்மனியைத் தோற்கடித்த அந்த முயற்சியில் நேச நாடுகளும், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் செயற்பட்ட தேசபக்தப் படையினரும், அன்றைய யேர்மனியில் செயற்பட்டுக் கொண்டிருந்த பாசிசத்துக்கு எதிரான சக்திகளும் கரங்கோர்த்துச் செயற்பட்டிருந்தன” என்பதையும் அவர் நினைவு படுத்தியிருந்தார்.
(சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னான காலகட்டத்தில் உருவான) “பனிப்போரின் முடிவு என்பது ஒட்டுமொத்த ஐரோப்பாவின் வெற்றியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தேவையற்ற விதத்தில் இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் செயற்பாடுகளே இத்தகைய பதற்றம் உருவாகக் காரணம்” என்கிறார் புட்டின்.
ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கும், பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளுக்கும் தான் எப்போதும் தயாராகவே இருப்பதாக ரஸ்யா தொடர்ந்து அறிவித்து வந்தாலும் அவை செவிமடுக்கப்படாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில், ரஸ்யாவின் அயல் நாடும், தற்போதைய நிலையில் எதிரி நாடு எனக் கணிக்கப்படும் நிலையில் உள்ள உக்ரைனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ‘நியோ நாசி’ எனப்படும் பாசிசக் கொள்கைகளைப் பின்பற்றும் ஹிற்லரின் வாரிசுகள் புதிது புதிதாக உருவாகி வருவதுடன், மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட வல்லரசு நாடுகள் உலகின் வளங்களைப் பங்கு போடுவதில் தமக்கிடையே மோதிக் கொண்டன. இரண்டாம் உலகப் போரின் நோக்கமும் அதுவே ஆயினும், அதில் வேறுபல துணை நோக்கங்களையும் பார்க்க முடிந்தது. இரண்டு போர்களிலும் அவதானிக்கப்பட்ட ஒரே பொது அம்சம் வல்லாதிக்கக் கனவுகளே. உலகை ஆளும் கனவுகளுடன் கூடிய சர்வாதிகாரிகள் போர்களை ஆரம்பித்து வைத்தார்கள்.
வளங்களைச் சுரண்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த பெரு முதலாளிகள் – எல்லைகள் கடந்து – அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள். உள்நாட்டில் வாழ்ந்த புத்திஜீவிகளும், வெகுமக்களும் தத்தம் ஆட்சியாளர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கினார்கள். இதனாலேயே ஹிற்லர் உட்பட சர்வாதிகாரிகளால் ஆட்சிக்கு வரவும், தத்தம் நாட்டு வளங்கள் அனைத்தையும் நாசகார யுத்தங்களுக்குப் பயன்படுத்தவும், இலட்சக் கணக்கான படைவீரர்களை மூளைச்சலவை செய்து, போர்முனைகளுக்கு அனுப்பிவைத்துப் பலியிடவும் முடிந்தது.
இத்தகைய வல்லரசுக் கனவுடன் கூடிய நாடுகள் இன்றைய உலகில் இல்லாமல் இல்லை. அவை வேறு வழிகள் ஊடாகத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. ‘தம்மைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பெரு முதலாளிகளின் தங்கு தடையற்ற சுரண்டல்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதே தம் பணி’ என்ற வகையில் அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில், குறித்த முதலாளிகளின் அபிலாசைகள் தடைப்படும் நிலை உருவாகுமானால், அத்தகைய நிலையைச் சமாளிக்க யுத்தமே ஒரே தீர்வு என்ற நிலை உருவாகுமானால், விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல் அத்தகைய நாடுகள் யுத்தங்களைத் தொடங்க தயங்கப் போவதே இல்லை என்பது பல தடவைகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய காலச் சூழலில், நாசகார விளைவுகளை ஏற்படுத்திய சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பு நாளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமான ஒன்றே.
‘பார்பறோசா படை நடவடிக்கை’ என்ற பெயரில் 1941 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்தப் படையெடுப்பில் 3,500 யுத்த தாங்கிகள், 7,000 எறிகணைகள் மற்றும் 3,900 விமானங்கள் எற்பவற்றின் துணையோடு 30 இலட்சம் யேர்மன் படையினர் பங்குகொண்டனர். அவர்களோடு தலா 3,000 விசேட பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் அடங்கிய நான்கு அதிரடிப் படைக் குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் குழுக்களின் ஒரே வேலை கைது செய்யப்படும் கம்யூனிஸ்டுகள், தேசபக்த போராளிகள், யூதர்கள் மற்றும் ‘சிந்தி’ எனப்படும் ரோமானிய நாடோடி மக்களைக் கொலை செய்வது மாத்திரமே.
ஹிற்லரின் பிரதான இலக்குகள் ‘போல்ஷ்விசம்’ என்ற சோவியத் பொதுவுடமையை நிர்மூலம் செய்வது, யூதர்களை முடிந்தளவு கொலை செய்வது, கிழக்குப் பிராந்தியத்தில் யேர்மன் மக்கள் சென்று குடியேறி வாழ்வதற்கான இடத்தை உருவாக்குவது என்பனவாக இருந்தன. மிகச் சரியாகச் சொல்வதானால், ஐரோப்பாவின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் ஸ்லோவிய இன மக்களில் குறைந்தது 30 வீதமானோரையாவது கொன்று, அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. அவ்வாறு அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, அங்கு யேர்மானியர்களைக் குடியேற்றிவிடுவதே ஹிற்லரின் திட்டமாக இருந்தது. இடங்களையும், வளங்களையும் கைப்பற்றுவது துணைக் காரணங்களாக மாத்திரமே இருந்தன.
எந்த நோக்கங்களோடு நாசிப் படைகள் சோவியத் ஒன்றியத்தினுள் நுழைந்தனவோ அவற்றை வெகு விரைவிலேயே அவை நிறைவேற்றத் தொடங்கின. படை நடவடிக்கை தொடங்கிய முதல் 6 மாதங்களிலேயே சுமார் 5 இலட்சம் யூதர்கள் விசேட அதிரடிப் படைக் குழுக்களாலும், அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களாலும் கொலை செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர, பல ஆயிரக் கணக்கான சோவியத் படையினரும், தேசபக்த போராளிகளும் கொலை செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரில் அதிக மனித அழிவுகளை எதிர்கொண்ட நாடாக அப்போதைய சோவியத் ஒன்றியம் விளங்கியது. உத்தியோகபூர்வ தகவல்களின் படி 27 மில்லியன் சோவியத் மக்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1987 முதல் 1991 வரையான காலப்பகுதியில் சோவியத் பாதுகாப்பு அமைச்சகமும் ரஸ்ய விஞ்ஞானக் கழகமும் இணைந்து நடாத்திய ஆய்வில் இறந்தோரின் எண்ணிக்கை 37 மில்லியன் என அறிவிக்கப்பட்டது.
இதில் 8.6 மில்லியன் மாத்திரமே சோவியத் படைவீரர்கள், ஏனையோர் பொதுமக்கள். இறந்த பொதுமக்களில் அநேகர் பஞ்சத்தாலும், மிக மோசமான வாழ்க்கைத் தரத்தாலுமே இறந்து போயினர். மரணத்தைத் தழுவிய படையினரில் 3 மில்லியன் பேர், போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டவர்களே. போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோரில் சுமார் 60 வீதமானோர் கொல்லப்பட்டனர். மீதிப் பேர் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இத்தகைய கொடூர விளைவுகளை ஏற்படுத்திய சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பை ரஸ்யா உள்ளிட்ட ஒருசில நாடுகளே இன்றும் நினைவு கூருகின்றன என்ற தகவலே, உலகம் எத்தகைய சுயநலப் போக்கில் செயற்படுகின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. யுத்தத்தை உண்மையாகவே எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள், மூன்றாவது உலகப் போர் கனவிலும் நடந்துவிடக் கூடாது என நினைப்பவர்கள், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டிய நாள் யூன் 22.