இந்தியாவில் 4-வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியாக மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Controller General of India-DCGI) அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 3-ஆம் அலை செப்டம்பர் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து, பயன்படுத்த அனுமதி கோரி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாடர்னா தடுப்பூசி mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 90% வரை பலன் அளிப்பது மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளில் தெரியவந்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளின் தேர்வாக பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளே உள்ளது.