சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்… தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை..
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 25 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. அதேசமயம், பல இடங்களில், தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேவையான, தடுப்பூசிகள் வந்த பின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக, தெரிவிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. பற்றாக்குறை காரணமாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று நடைபெறாது என, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.