மிதக்கும் கொட்டகை அமைத்து சீன நாட்டவர் சுகபோக வேலை! – கஜேந்திரன் சீற்றம்.

“தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முனைவதாகப் பிடித்து சிறையில் அடைக்கும் அரசு, மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீன நாட்டவர் ஒருவர் சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, பூநகரி – கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தால் அனுமதியற்ற கடலட்டை வளர்ப்பை பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட அட்டைப் பண்ணையைப் பார்ப்பதற்காக வந்திருந்தோம். குறித்த பகுதி கௌதாரிமுனைப் பகுதி மக்கள் காலாதிகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடலட்டை வளர்ப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பை மேற்கொண்டுள்ளார் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்தப் பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களுக்குக் கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால், எந்தவிதமான ஆவணமும் அவர்களால் இன்றும் காட்டப்படவில்லை.
ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்தைப் பிடித்து கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது. இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும் கூட அந்தச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழர்களின் பிரதேசத்தில் அந்நியர்கள் வந்து இந்த பிரதேச மக்களின் அனுமதியில்லாமல் உள்நுழைந்திருப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீணாக ஒரு பதற்றத்தை இந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்கு இந்த அரசு அனுமதித்திருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அல்லது சீனர்கள் என்றதும் அரசு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றதா என்ற கேள்வியும் இருக்கின்றது.
தமிழர்கள் சில காரியங்களைச் செய்கின்றபோது சம்மந்தம் இல்லாமல் அவர்கள் நாட்டைப் பிரிக்க முனைவதாகக் கூறி பிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால், எங்கிருந்தோ வந்த சீனர் மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக எங்களுடைய மக்களைத் தெருவில் விட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றார்” – என்றார்.