செல்பி எடுப்பது குற்றச்செயல் – தடை செய்த குஜராத்தின் டாங் மாவட்ட நிர்வாகம்
ஸ்மார்ட்போன்கள் வருகைக்குப் பிறகு, உலகம் உள்ளங் கைகளில் அடங்கிவிட்டது என்று சொல்லுமளவுக்கு எல்லா வசதிகளும் ஒற்றை செல்போன்களிலியே கிடைக்கின்றன. சாதா செல்போன்கள் பயன்பாட்டில் இருந்த காலங்களில் வெறுமனே பேசுவதற்கு மட்டும் என்று இருந்த நிலையைக் கடந்து பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறது. பல தொழில்களின் அடிப்படையாகவே ஸ்மார்ட்போன்களே இருந்துவருகின்றன. உதாரணமாக, ஓலா, ஸ்விகி, அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தொழில்களைச் சொல்லலாம். அதில், தொழில் செய்பவர்களுக்கும், பயனாளர்களுக்கும் தொடர்பு சாதனமாக இருப்பது ஸ்மார்ட்போன். இத்தகைய பயன்பாடுகளைக் கடந்து ஸ்மார்ட்போனில் கேமரா என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
ஸ்டியோவுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்தக் காலத்தைக் கடந்து தற்போது நவீன ரக கேமராக்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அடங்கிய கேமராக்கள் ஸ்மார்ட்போனிலேயே இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களில் படம் எடுக்கும் காலம் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு, செல்பி என்பது உருவாகி அதன் மோகம் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வித்தியாச வித்தியாசமான இடங்களில் இருந்துகொண்டு செல்பி எடுப்பதை பலரும் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. உயரமான இடங்கள், ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது ஒரு பெருமைக்குரிய செயலாகவே இருந்துவருகிறது.
அதனால், பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் அது தொடர்ந்துதான் வருகிறது. செல்பி எடுக்கும்போது ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வரிசையில் உள்ளன. இந்தநிலையில், குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் செல்பி எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தெற்கு குஜராத் பகுதியிலுள்ள டாங் மாவட்டம் சுற்றுலா பிரசித்தி பெற்ற மாவட்டமாகும். குறிப்பாக பருவமழைக் காலங்களில் இந்த மாவட்டத்திலுள்ள மலைப் பகுதிகள், அருவியில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருவதால், இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், டாங் மாவட்டத்தில் செல்பி எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கும் மாவட்ட அதிகாரி, ‘வித்தியாசமான செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்கின்றனர். அதனால், அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் செல்பி எடுக்கும் முயற்சியில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர், காயமடைந்துள்ளனர். அதனால், செல்பி எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.