‘டெல்டா’வுக்கு எதிராக கோவாக்சின் திறம்பட செயல்படுகிறது – அமெரிக்க சுகாதார நிறுவனம் அறிக்கை
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளை திறம்பட கையாளுகிறது என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பிற நாடுகளில் இதுவரை சுமார் 25 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பபூசி விரைவில் அமெரிக்காவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதற்கான பணிகளை பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக செய்துவருகிறது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி B.1.1.7 (Alpha) மற்றும் B.1.617 (Delta) வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் NIH தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் ஒரு பகுதியான தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:-
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கோவாக்சின் தடுப்பூசி கோவிட் வைரசின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளை நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை இந்த தடுப்பூசி தூண்டுகிறது; கோவிட் வைரசின் உருமாற்றமடைந்த வைரசுகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.