ரூ.4.5 கோடி லஞ்சம்: ஆவின் சங்கத்தில் 460 பணி நியமனம் நிறுத்திவைப்பு -முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விசாரணை?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி, ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 460 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆவின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் பணியிடம் நிரப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து முறையாக தேர்வு நடைபெறாமல் கடந்த 24.5.2021-ம் ஆண்டு முறைகேடாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஆவின் பால் உற்பத்தி சங்கத்தில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆவின் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்த 460 பணியிடங்கள் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ‘லஞ்சம் பெறப்பட்டு பணி நியமன ஆணை பெற்ற 460 ஆவின் ஊழியர்களுக்கு பணி ஆணை ரத்து செய்யப்படுகிறது. 40 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மேலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 236 பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்பட்டது? எவ்வளவு லஞ்சம் பெறப்பட்டுள்ளது? யாருக்கெல்லாம் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 236 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் சுமார் 4.5 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற அத்தனை முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.