கடுமையாக வீசும் அனல் காற்றுக்கு 486 க்கும் மேற்பட்டோர் பலி.
வட அமெரிக்க நாடான கனடாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையாக வீசும் அனல் காற்றுக்கு 486 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை தற்போது 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.
வான்கூவர் நகரில் மட்டும் அனல் காற்றுக்கு 134 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த 26 – 30ம் திகதிக்குள் அனல் காற்று மற்றும் வெப்பத்துக்கு 486 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் அனல் காற்று தொடர்ந்து வீசும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்பத்தை தணிக்க கடற்கரைகளிலும் நீச்சல் குளங்களிலும் குவிந்து கிடக்கும் நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கனடா மட்டுமின்றி அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடும் வெப்பம், அனல் காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணம், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக, மேற்கு கனடாவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவி வருவதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் கிராமங்களை சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.