உலகின் முதல் DNA தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிப்பு! பயன்பாட்டுக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பம்
கோவாக்சினுக்கு பிறகு இந்தியாவில் 2-வது கொரோனா தடுப்பூசியாக ZyCoV-D தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா (Zydus Cadila), இன்று அதன் கோவிட்-19 தடுப்பூசியான சைகோவி-டி-க்கு (ZyCoV-D) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ZyCoV-D தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி என்ற பெருமையை பெரும்.
மேலும், இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் ஐந்தாவது கோவிட்-19 தடுப்பூசியாகவும் ZyCoV-D இருக்கும். இந்தியாவில் இதுவரை கோவாக்சின் (பாரத் பயோடெக்), கோவிஷீல்ட் (சீரம் நிறுவனம்), ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி. மற்றும் மாடர்னா ஆகிய 4 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கும் மேலாக, ZyCoV-D அங்கீகரிக்கப்பட்டால், இதுவே உலகின் முதல் DNA தடுப்பூசி என்ற சிறப்பையும் பெரும்.
Zydus நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு ZyCoV-D தடுப்புசியை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 1,000 தன்னார்வலர்கள் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இந்த தடுப்பூசி ஒரு இடைக்கால ஆய்வில் 66.6% செயல்திறனைக் காட்டியதாக மருந்து Zydus நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டி.என்.ஏ தடுப்பூசி, 3 டோஸ் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டோஸ் போட்டதிலிருந்து 28-வைத்து நாளில் இரண்டாவது டோஸ், இறுதியாக 56-வைத்து நாளில் மூன்றாவது டோஸ் போடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ZyCoV-D தடுப்பூசி, இரண்டு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைகளுடன் வருகிறது. நீண்ட கால பயன்பாட்டிற்கு இதை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை சேமிக்க முடியும், மேலும் குறுகிய கால பயன்பாட்டிற்கு 25 டிகிரி செல்சியஸ் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.