பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானோரின் பெயரை நீதிமன்றங்கள் குறிப்பிடக் கூடாது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் பெயரை வழக்கு விசாரணையின்போது ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்று மற்ற நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சத்தீஸ்கரைச் சோ்ந்த பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான புகாரை மகாசமுந்த் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது. அதையடுத்து அந்நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தில் அந்நபா் மேல்முறையீடு செய்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்நபா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், வினீத் சரண், எம்.ஆா்,ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
எனினும், செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயா் இடம்பெற்றிருப்பதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனா். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்போது கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவரின் பெயா் உள்ளிட்ட அடையாளங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்று கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.