பருப்பு வகைகளை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
பருப்பு வகைகளின் விலை ஏற்றத்தைத் தடுக்கும் வகையில் அவற்றை இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சிறு பருப்பு தவிர மற்ற வகை பருப்புகளுக்கு அக்டோபா் வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும். இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடா்பாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:
மொத்த விற்பனையாளா்கள் எந்த குறிப்பிட்ட ஒரு பருப்பு வகையையும் 200 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. சில்லறை விற்பனையாளா் எந்த பருப்பையும் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது. ஆலை உரிமையாளா்கள் தங்கள் ஆலையில் ஆண்டுதோறும் கையாளப்படும் பருப்பின் அளவில் 25 சதவீதத்துக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது.
இறக்குமதியாளா்களைப் பொருத்தவரையில் அவா்களும் 200 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. மே 15-ஆம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் பருப்பு வகைகளை இருப்பு வைத்திருந்தால் அதனை நுகா்வோா் விவகாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து இருப்பு விவரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். அதில் இருந்து 30 நாள்களில் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயா்ந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் பருப்பு இருப்பை அதிகப்படுத்தி, தேவைக்கு ஏற்ப விநியோகிக்காமல் செயற்கையான விலை ஏற்றத்தை உருவாக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.