உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் நள்ளிரவில் திடீர் ராஜினாமா: பதவியேற்ற 4 மாதங்களுக்குள் விலகல் ஏன்?

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்து திரத் சிங் ராவத் நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 4 மாதங்களுக்குள் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என பல்வேறு எம்.எல்.ஏக்களும், கட்சியின் உள்ளூர் தலைவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாக அகில இந்திய பாஜக தலைமை அவரை பதவி விலகச் செய்தது, இதனையடுத்து திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக கடந்த மார்ச் 10ம் தேதி திரத் சிங் ராவத் உத்தரகண்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவாக இருக்கவில்லை.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரத் சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மெளர்யாவை நேரில் சந்தித்து தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
பதவி விலக காரணம் என்ன?
முதலமைச்சராக பதவி வகித்த போதிலும் திரிவேந்திர சிங் Pauri Garhwal தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார். அதே நேரத்தில் எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதல்வராக தொடர வேண்டுமென்றால் பதவியேற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வாக வேண்டும். அல்லது மேல்சபையில் எம்.எல்.ஏவாக தேர்வாக வேண்டும். உத்தரகண்டில் மேல்சபை என்பது கிடையாது. இந்த சூழலில் செப்டம்பர் 10ம் தேதி வரை திரத் சிங்கிற்கு எம்.எல்.ஏவாக அவகாசம் இருந்தது.
தற்போது ஹால்த்வானி மற்றும் கங்கோத்ரா ஆகிய தொகுதிகள் மட்டுமே காலியாக இருந்து வரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்த இயலாது என்பது தேர்தல் விதியாகும். இதன் காரணமாகவும், முன்னதாக கொரோனா பரவல் காரணமாகவும் உத்தரகண்டில் இடைக்கால தேர்தல் நடத்த முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டது.
இதனையடுத்து அரசியலமைப்பு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திரத் சிங் ராவத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. 115 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ள திரத் சிங் ராவத் தான் அம்மாநிலத்தில் குறைந்த காலம் முதல்வராக இருந்தவராக மாறியுள்ளார்.
புதிய முதல்வர் யார்?
இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக செயல்படுவார் என பாஜக அறிவித்துள்ளது. 4 மாதங்களுக்குள் உத்தரகண்ட்டிற்கு 3வது முதல்வர் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது,