இந்தியாவுக்கான இடைக்கால குறைதீா் அதிகாரி நியமனம் இறுதி கட்டத்தில் உள்ளது: தில்லி உயா்நீதிமன்றத்தில் ட்விட்டா் நிறுவனம் தகவல்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவுக்கான இடைக்கால தலைமை குறைதீா் அதிகாரி நியமனம் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. அதற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் உடன்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், ட்விட்டா் நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின்படி இந்தியாவில் குறைதீா் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி கெடு விதித்தது.
ஆனால், அதன் பிறகும் ட்விட்டா் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனைத் தொடா்ந்து, இந்தியாவில் அந்த நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
பின்னா், மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உள்பட்டு தா்மேந்திர சதூா் என்பவரை இந்தியாவுக்கான இடைக்கால குறைதீா் அதிகாரியாக ட்விட்டா் நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே அவா் அந்தப் பதவியிலிருந்து விலகினாா்.
இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உடன்பட மறுக்கும் ட்விட்டா் நிறுவனத்துக்கு எதிராக அமித் ஆச்சாா்யா என்ற வழக்குரைஞா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்தாா்.
அந்த வழக்கில் சனிக்கிழமை ட்விட்டா் நிறுவனம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உள்பட்டு இந்தியாவுக்கான இடைக்கால குறைதீா் அதிகாரி அண்மையில் நியமிக்கப்பட்டாா். அந்த நியமனத்தான நடைமுறைகளை முழுமையாக முடிப்பதற்கு முன்பாகவே, அவா் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகிவிட்டாா். எனவே, புதிதாக இந்தியாவுக்கான இடைக்கால தலைமை குறைதீா் அதிகாரியை நியமிப்பதற்கன பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது’ என்று ட்விட்டா் தெரிவித்துள்ளது.
மேலும், ‘இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை ட்விட்டா் மதிக்கவில்லை என்று புகாா் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில், ட்விட்டா் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்ற வகையில், இந்த ஊடகம் மூலம் வெளியாகும் பதிவுகளுக்கான வெளியீட்டாளா் அல்லது உருவாக்குபவா் என்ற பொறுப்புக்கு ட்விட்டா் நிறுவனத்தை உள்படுத்த முடியாது. எனவே, நிறுவனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் பிரமாணப் பத்திரத்தில் ட்விட்டா் கோரியுள்ளது.