ஜேபிசி விசாரணை தேவை: காங்கிரஸ்
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் அணுகுமுறை சரியானது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்டது என்பதால் நேர்மையான, சுதந்திரமான ஜேபிசி விசாரணை மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.
இந்த விவகாரம் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல; மாறாக இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது; மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்புடையது.
ஜேபிசி குழுவால் அனைத்து சாட்சிகளையும் அழைத்து விசாரிக்க முடியும் என்பதோடு, அனைத்து அரசு ஆவணங்களையும் கேட்டுப் பெற முடியும். ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கோ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கோ (சிவிசி) இது சாத்தியமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஜேபிசி குழு அமைத்து விசாரிப்பதே ஒரே வழி என்றார்.