பண மோசடி வழக்கு:முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு மீண்டும் அமலாக்கத் துறை சம்மன்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு பண மோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தபோது மும்பையில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபானக் கூடங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வற்புறுத்தியதாக மும்பை முன்னாள் காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா். இதையடுத்து அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அவா் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் லஞ்ச குற்றச்சாட்டு வெளிவருவதற்கு முன்பாக, பண மோசடியில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில போலி நிறுவனங்களுடன் அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடா்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனில் தேஷ்முக்கிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக அந்த துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையொட்டி தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 5) ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
தான் நேரில் விசாரணைக்கு ஆஜரானால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே காணொலி வழியாக விசாரணைக்கு ஆஜராக அனுமதியளிக்குமாறும் அவா் கோரியுள்ளாா்.