பதிவுத் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்குக் கொரோனா பலரைத் தனிமைப்படுத்த நடவடிக்கை

யாழ்., ஊர்காவற்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பதிவுத் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஊர்காவற்துறை, பருத்தியடைப்புப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தபோது, குறித்த பெண் தனது வீட்டுக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை தெரியவந்துள்ளது..
அதையடுத்து பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.