நெட்வொர்க் பிரச்னை.. மரம், பாறைகளில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
மொபைல் நெட்வொர்க் இல்லாததால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மரம், பாறைகளில் ஏறி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
ராசிபுரத்தை அடுத்த பெரப்பன் சோலை ஊராட்சியில், சுமார் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக அவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் பயின்று வருகின்றனர்.
ஆனால், பெரப்பன் சோலை பஞ்சாயத்து பகுதியில் மொபைல் போன் டவர்கள் இல்லாததால், செல்போனில் பேசுவதற்கே அவர்களுக்கு போதுமான சிக்னல் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், எட்டு கிலோமீட்டர் தொலைவில் முள்ளுக்குறிச்சி மற்றும் தம்மம்பட்டி பகுதிக்கு மாணவர்கள் சென்றுவருகின்றனர்.
மேலும் கிராமத்தில் உயரமாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாறைகள் மீது அமர்ந்து, எந்தவித உயிர்பயமுமின்றி ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வரும் மாணவர்கள், பெரப்பன் சோலையில் மொபைல் டவர் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.