தடைசெய்யப்பட்ட நாட்டுக்கு சென்று வந்த தமிழக, கேரள இளைஞர்கள்! சென்னை விமான நிலையத்தில் கைது
ஏமன் நாட்டுக்கு சென்று திருமம்பிய இரண்டு இளைஞர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்திய அரசாங்கத்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று, நாடு திரும்பிய தமிழக மற்றும் கேரள இளைஞர்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழக மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பெரோஸ் கான் (33) மற்றும் கேரளா, மலப்புரத்தைச் சேர்ந்த சமீர் (38) ஆகிய இருவரும், ஐந்தாண்டுகளுக்கு முன், சவுதி அரேபியா நாட்டிற்கு, டிரைவர் வேலைக்காக சென்றனர்.
இவர்களது, சவூதி அரேபியா விசாக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலாவதி ஆகிவிட்டன. ஆனாலும், இருவரும் சவூதியில் வேலை பார்த்தனர்.
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு, அந்நாட்டு அரசு கடும் தண்டனைகள் விதிப்பது வழக்கம்.இருவரும், தண்டனையிலிருந்து தப்பிக்க, சவுதியிலிருந்து ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து இந்தியா திரும்ப முடிவெடுத்தனர்.
அதன்படி, இருவரும் ஏமனுக்கு சென்று, தங்களது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போனதாக கூறி, ஏஜன்ட்களின் உதவியுடன், இந்திய துாதரகம் வாயிலாக, அவர்சரகால சான்றிதழை (Emergency Certificate) பெற்றனர்.
பின், ஏமன் நாட்டின் தலைநகர் சானாவிலிருந்து, ஷார்ஜா வழியாக நேற்று காலை 10:00 மணிக்கு, சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருவரது பாஸ்போர்ட்களையும், குடியுரிமை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும்,இந்தியா அரசால் தடை செய்யப்பட்ட, ஏமன் நாட்டிற்கு சென்று வந்தது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், மேல் விசாரணைக்காக, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.