தமிழர் பிரச்சினைகளுக்குக் கட்டாயம் தீர்வு வேண்டும்! – ரணில் எம்.பி. வலியுறுத்து.
“ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின் பிரச்னைகளுக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“தமிழ்மொழி தொடர்பான சட்ட அமுலாக்கம் உட்பட ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவற்றுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் உள்நாட்டுப் போர் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திகளை முடக்கிவிட்டது. எமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திகள் குறித்து பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒத்துழைத்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மிக ஆர்வமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்காலத்திலும் வடக்கின் அபிவிருத்திகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும்.
30 வருட காலப் போர் காரணமாக யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. எனவே, இங்கு தொழில் வாய்ப்புக்களும் வாழ்வாதார ஊக்குவிப்புக்களும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறில்லையெனில் அங்கு வாழும் இளையோரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும். மறுபுறம் தமிழ் மொழி தொடர்பான சட்ட அமுலாக்கம் உட்பட ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவையும் தீர்க்கப்பட வேண்டும்.
அதேபோன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின் பிரச்சினைகளுக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும்” – என்றார்.