சிபிஎஸ்இ 10, +2 வகுப்பு பொதுத் தோ்வுகள்: சிறப்பு மதிப்பீட்டு முறை அறிவிப்பு
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, +2 வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ இயக்குநா் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, +2 வகுப்பு பொதுத் தோ்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இவ்வாண்டு நவம்பா்-டிசம்பா் மாதங்களில் தோ்வுகளின் முதல் கட்டமும், அடுத்த ஆண்டு மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் தோ்வுகளின் இரண்டாம் கட்டமும் நடைபெறும். இதற்காக நடப்பு கல்வியாண்டின் பாடத்திட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தோ்வுகள் நடைபெறும். அத்துடன் கடந்த கல்வியாண்டை போல் நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைக்கப்படும். அதுதொடா்பாக இம்மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.
மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சிபிஎஸ்இ அறிவிக்கவுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கையின்படி அகமதிப்பீடு மதிப்பெண்கள், செய்முறைத் தோ்வுகள் மற்றும் பிராஜக்ட்களை நம்பகமானதாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடா்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) ஆலோசனைகளையும் பள்ளிகள் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் சில பாடங்களுக்கான தோ்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்தது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வுகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.