100 ஏக்கரில் தொழில் நகரம்.. ஒரு லட்சம் பேருக்கு வேலை – புதுச்சேரி அரசின் அட்டகாச திட்டம்!

புதுச்சேரியில் விரைவில் 100 ஏக்கரில் தொழில் நகரம் அமைகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் அலுவலக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் அமைப்பது குறித்த அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆலோசகர் நாராயண் முன்னிலை வகித்திட ஷெல், டெக்வேஸ், எக்பெடிடர், கே.ஐ.சி.எல், ஆம்பெக்ஸ், எக்ஸ் நாஸ்காம் (
Shell, Techways, Expeditor, KICL, AMPEX, ex.NASSCOM) உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தொடர்பாக அரசு விடுத்துள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் மிக விரைவில் ஒரு தொழில் நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரி அரசுக்கு வருவாயும் கிடைக்கும். இதன் மூலம் புதுச்சேரி இளையோரும், பொதுமக்களும் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
தற்போது வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும் புதுச்சேரி மக்களும் இங்கேயே வேலை செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த நகரத்தில் அனைத்து வகையான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் வரவிருக்கின்றன. மேலும், இந்த தொழில் நகரத்தில் மக்களின் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் ஓர் பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது.
இதன்மூலம் புதுச்சேரி மக்களின் தொழில் திறமைகள் மேம்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், அரசு செயலர் வல்லவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.