தினசரி கொரோனா பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்தது
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 39,796 போ் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,05,85,229 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தொடா்ந்து 8-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,82,071 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 1.58 சதவீதமாகும்.
தொடா்ந்து 53-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 42,352 போ் குணமடைந்தனா்.
இதுவரை மொத்தம் 2,97,00,430 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி மொத்த பாதிப்பில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,97,77,457 கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை கொரோனாவால் 4,02,728 போ் உயிரிழந்துவிட்டனா். இதில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 723 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 88 நாள்களில் மிகக்குறைந்த தினசரி கொரோனா உயிரிழப்பாகும். புதிதாக ஏற்பட்ட 723 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 306 உயிரிழப்புகளும், கேரளத்தில் 76 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.