சில்லறைத் திருத்தத்தைக் கொண்டுவந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றாதீர்கள்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு சுமந்திரன் இடித்துரைப்பு.
“சில்லறைத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முனைய வேண்டாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு வெறும் திருத்தங்கள் பயனற்றவை. அது முற்றாக நீக்கப்படவேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கான திருத்தங்கள் மீது நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின்போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒருவரின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இருப்பதனால்தான் பொலிஸ் சித்திரவதை மோசமாக உள்ளது. அடித்து துன்புறுத்தி வாக்குமூலத்தைப் பெற்று வழக்கை முடிப்பதில் பொலிஸ் மும்முரமாகவுள்ளதால் உண்மையான துப்பறியும் திறன்கூட பொலிஸாரிடம் இல்லாது போய்விட்டது.
நீங்களே நியமித்த பரணகம ஆணைக்குழு, உடலகம் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு ஆகியனவே ஒத்துக்கொண்டுள்ளன இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயினர் என. இதுவரை ஒருவரையாவது கண்டுபிடித்தீர்களா? அல்லது அதற்குக் காரணமான ஒருவரையாவது சட்டத்தின் முன் நிறுத்தினீர்களா?
உயர் கடற்கடை அதிகாரிகளால் கப்பத்துக்காக 11 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட நீதிவான்களுக்கு இந்தச் சட்டம் இடமளிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த எதுவித ஏற்பாடும் இங்கு செய்யப்படவில்லை.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டங்கள் வெறுமனே கண்துடைப்புக்களே. ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முனையும் மிகவும் பலவீனமான, வீணான முயற்சியே இது” – என்றார்.