தலையணை வைத்து அமுக்கி… இரவில் கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் புது டெல்லியில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்.
நரசிம்மராவ், அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2000ஆம் ஆண்டு காலமானார்.
இவரது மனைவியான மனைவி கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் வசித்துவந்தார்.
இந்தநிலையில் அவர், நேற்று (06.07.2021) இரவு அவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சலவைக்காரராக பணிபுரிந்துவந்த ராஜூ லக்கான் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும், கொலையில் சம்பந்தப்பட்ட இருவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இரவு 9 மணியளவில் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டுக்கு வந்த ராஜூ உள்பட மூன்று பேர், வீட்டுப் பணிப் பெண்ணை அடித்து அறையில் பூட்டிவிட்டு, கிட்டி குமாரமங்கலத்தின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கொலை நடந்த இடத்தில் பல சூட்கேஸ்கள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன என்பதால் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.