வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தண்டப்பணம்…….
வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் தங்கியிருக்கும் காலத்துக்கான வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலரை அறவிடுவது உள்ளிட்ட வீசா வழங்கும் நடைமுறைகளை மறுசீரமைக்கும் குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (06) கூடிய பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளுக்காக -2019 யூன் 03 ஆம் திகதிய 2126/13 ஆம் இலக்க அதிவேட வர்த்தமானி பத்திரிகை யூலை 08 ஆம் திகதி அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் கீழ் கலந்துகொண்டனர்.
சுற்றுலா வீசா கட்டணத்தை அறவிடும்போது தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் குழப்பான முறைக்குப் பதிலாக ஒரே கட்டண முறையை அறிமுகப்படுத்துவது, சுற்றுலா வீசாவுக்காக வழங்கப்படும் காலத்தை மூன்று மாதங்களிலிருந்து 09 மாதங்களாக மாற்றுவது உள்ளிட்டவை இதன்மூலம் மேற்கொள்ளப்படும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் திரு.யூ.வீ.சரத் ரூபசிங்ஹ தெரிவித்தார்.
அத்துடன் தற்பொழுது இலங்கைப் பெறுமதியில் அறவிடப்படும் வீசா கட்டணம் அமெரிக்க டொலரில் அறவிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதனைவிட, 2018ஆம் ஆண்டுக்கான ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.