அரசைப் பதவியில் ஏற்றிய பௌத்த மேலாதிக்கம் இன்று தமிழ், முஸ்லிம்களிடம் மண்டியிடும் நிலை.
“தமிழ் மக்களையே அழித்த சிங்கள பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்திருப்பார்களாயின் இவ்வாறு மண்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.”
இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று மதியம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையினுடைய இறைமையைக் காப்பாற்றுவதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை தங்களுடன் ஒன்றிணையுமாறு பெளத்த துறவிகள் கோரிக்கை விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள்தான் இப்போது இருக்கக்கூடிய அரசைப் பதவிக்கு கொண்டுவந்து முன்னணியில் நின்று அதற்கான வேலைகளை நடத்தியவர்கள். இப்போது இந்த அரசு இந்த நாட்டையே ஏலம் கோரி விற்கும் நிலைக்கு போய்விட்டது என்பதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்கள் சீனர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொடுக்கப்படுகின்றது.
ஒரு பக்கம் மீன்பிடி மறுபக்கம் தென்னந்தோட்டங்கள், மாற்று மின்சாரத் திட்டங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள். இப்படி பல்வேறுபட்ட தேவைகளுக்காக நிலங்களும் தொழில்களும் சீனர்கள் வசம் போகின்றன. அதுமட்டுமல்ல வடக்கில் இருக்கக் கூடிய முக்கியமான காணிகளும் சீனர்களிடம் போகவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
ஆகவே, ஏற்கனவே அம்பாந்தோட்டை அதனைச் சுற்றியுள்ள 15 ஏக்கர் நிலப்பரப்பு கொழும்பு துறைமுக முனையம் அதனைவிட போட்சிற்றி என பல விடயங்களை சீனாவுக்கு வழங்கும் இந்த அரசு வடக்கிலும் பிரதேசங்களை சீனாவிடம் வழங்கக் கூடிய போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது.
போரை நடத்துவதற்காக பல்வேறு நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றார்கள், சீனாவிடம் இருந்து விமானங்களைப் பெற்றார்கள், ஆயுதங்களைப் பெற்றார்கள், நிதியைப் பெற்றார்கள். இன்று அதற்கு பிரதி உபகாரமாக முழு நாட்டையுமே தாரைவார்த்து கொடுக்கின்ற துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போது சிங்கள மக்கள் புத்திஜீவிகள் இந்த நாட்டை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று இண்டாவது சுதந்திரத்துக்காகப் போராடவேண்டி இருக்கின்றது என்று பெளத்ததுறவிகள் பேசக்கூடிய அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது” – என்றார்.