ஜிகா தீநுண்மி பாதிப்பு: கா்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தல்
கேரள மாநிலத்தில் ஜிகா தீநுண்மியால் 15 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீநுண்மியால் கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சோ்ந்த, 24 வயது கா்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா தீநுண்மி கண்டறியப்பட்டது. தற்போது, குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த பெண்ணுடன் தொடா்பில் இருந்த 14 பேருக்கும் ஜிகா தீநுண்மி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஜிகா தீநுண்மி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ்’ கொசுக்கள் தான் ஜிகா தீநுண்மி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள, கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், ‘ஏடிஸ்’ கொசு புழு அழிப்பு பணிகளை தீவிரப்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ் கூறியது: தமிழக – கேரள மாநில எல்லை மாவட்டங்களில், ஏற்கெனவே கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த, முதல்வா், சுகாதாரத்துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா். அதன் அடிப்படையில் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோன்று எல்லை மாவட்டங்களில் தற்போது மழை பெய்துள்ளது. நல்ல தண்ணீரில், ‘ஏடிஸ்’ கொசு வளரும் என்பதால் வீடுகளுக்கு அருகில் உள்ள தேவையற்ற நெகிழிப் பொருள்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில், நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு மொட்டை மாடிகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளான, காய்ச்சல், சருமப் பாதிப்பு, தலைவலி, மூட்டுவலி, சிவந்த கண்கள் போன்ற பாதிப்பு தான், ஜிகா தீநுண்மிக்கும் ஏற்படும். எனவே, அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குறிப்பாக, கா்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை, உடல் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, எவ்வித உடல் பாதிப்பாக இருந்தாலும், டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். அதிக தண்ணீா், காய்கறி, வைட்டமின் மாத்திரை போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக, உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.