இராணுவத்தினரின் துணையுடன் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி! விக்னேஸ்வரன் எம்.பி. விசனம்.

“நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்று நடைபெறும்போது வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் எழுத்தில் அடங்காத உடன்பாடு ஒன்று எட்டப்படுகின்றது. நாம் உங்களுக்கு வாக்களித்து நீங்கள் வென்றால் எமது பிரச்சினைகளைப் பேச வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரம் கிடைத்த பின்னர் எம்மை விரட்டக் கூடாது என வாக்காளர் வேட்பாளர்களுடன் உடன்பாடு செய்கின்றனர்.
வேட்பாளர்களும் இந்த எழுத்தில் அடங்காத உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாம் வென்றால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம், சுயநலம் கருதிச் செயற்படமாட்டோம். உங்களுடன் ஒன்றாக நிற்போம் என்று கூறுகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் தாற்பரியம்.
ஆனால், இவ்வாறு வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வென்ற பின்னர் மக்களை மறந்து, அவர்களுடனான உடன்பாடுகளை மீறி ஜனநாயகத்துக்கு முரணாகச் செயற்படத் தொடங்குகின்றனர். இதனால் மக்கள் இந்த அரசியல்வாதிகளுடனான தமது உடன்பாட்டை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இதனை எடுத்துக்காட்ட முற்படும்போதே ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது என ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் தலைதூக்குகின்றது.
தற்போது நிர்வாகம் சம்பந்தமான சகல விடயங்களிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சர்வாதிகாரம் வித்திடப்படுகின்றது.
இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. இவ்வாறான நிலையில்தான் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இவற்றையும் சர்வாதிகாரம் மூலம் அடக்கவே ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்” என்றார்.