வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவை அமைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடன் தவணைச் செலுத்துதலை மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க, அதாவது 31-08-2021 வரை ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுப்பது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை போலிருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்று முதல் அலை காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தனியார் வாகனத் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, கனரக வாகனத் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, கனரக வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வாகனங்களுக்கான கடன் தொகையைச் செலுத்த முடியாமல், அவதிப்பட்டு வந்த நிலையில் மூன்று மாதக் கடன் தள்ளிவைப்புக்கான உத்தரவை இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியது. தமிழக அரசும் கடன் தொகை வசூலிப்பை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதோடு, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதன் காரணமாக, வாகன கடன்களை வாங்கியவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கொரோனா இரண்டாவது அலையின்போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டி வருவதாகவும், முதல் அலையின்போது இதுபோன்ற பிரச்சினைகள் வந்தவுடன் காவல் துறையினர் தலையிட்டு அவற்றைத் தடுத்து நிறுத்தினர் என்றும், ஆனால், தற்போது புகார்களைக் கூட காவல் துறையினர் பெறாமல் இருக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குக் காரணம் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக, காவல் துறையினருடன் கைகோத்துள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் 15 லட்சம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகையையும் அவர்களிடமிருந்தே வசூலிப்பதாகவும், சில நேர்வுகளில், தவணையைச் செலுத்தினாலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தைத் தர நிதி நிறுவனம் மறுக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. ஏலத்தில் விடப்படும் வாகனங்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் என்று வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த புகார்களை ஆதாரங்களுடன் தருவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்நிலை இணைய முகப்பினை உருவாக்கி உள்ளதாகவும், இதுகுறித்த புகார்களை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளிக்குமாறு வாகன உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளதாகப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இருப்பினும், வங்கிசாரா நிதி நிறுவனங்களால் வாகன உரிமையாளர்கள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்வதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த புகார்களை விசாரிக்க தனிப்பிரிவை அமைக்கவோ அல்லது தனி அதிகாரிகளை நியமிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு.
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கடன் வசூலில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் மீறி காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைத் தடுத்து நிறுத்தவும், வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் தனிப்பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.