மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்காக ’கேட்ஜட் வங்கி’- ஜார்க்கண்ட் காவல்துறையின் அசத்தல் முயற்சி!
ஜார்க்கண்ட் காவல்துறை, ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்க வசதியில்லாத குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புப் பயன்பாட்டுக்கு விநியோகிக்க, பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை பெறுவதற்கான கேட்ஜட் வங்கியை அமைக்க முன்வந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன மற்றும் பெரும்பாலான பள்ளிகள் கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் வழியே தொடங்கிய போது, அனைவருக்கும் அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போனது. வசதி வாய்ப்புகள் இல்லாத வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கும் பல மாணவர்களுக்கு, ஒரு மொபைல் போன் அல்லது வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான சாதனங்கள், வாங்க முடியாத நிலை உள்ளது.
அவர்களின் தேவைகளை மனதில் கொண்டு, ஜார்க்கண்ட் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முன்னேறியுள்ளது. பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வங்கி உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த சாதனங்களை சரிசெய்து இந்த குழந்தைகளுக்கு விநியோகிக்கும் ஒரு மின்னணு கேட்ஜட் வங்கியை விரைவில் உருவாக்கவுள்ளது. இதனால் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்க முடியும். இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சமூகத்தின் பல்வேறு நிலையிலிருந்து வரும் குழந்தைகளிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என்று பொறுப்புணர்வுடன் கூறினார், டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், நீராஜ் சின்ஹா.
“ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவும். ஆனால் அவை இல்லாதவர்கள் அவ்வாறு என்ன செய்வது? இந்த நிலை, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்” என்று டிஜிபி ஊடகங்களுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆகையால், வசதியற்ற குழந்தைகளின் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்வதற்காக, பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை பெறுவதற்கான இந்த உந்துதல், அடிமட்ட சமூகங்களுக்கு சென்றடையும். இதனால் அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியும். காவல் நிலையங்கள் அனைத்தும் பொதுமக்கள் தங்கள் பழைய சாதனங்களை எப்படி, எங்கு நன்கொடையாக வழங்க முடியும் என்பதைப் பற்றி தங்களின் ஃபாலோயர்களுக்கு சமூக ஊடகங்களில் ட்வீட் செய்துள்ளன.
பெரும்பாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் தங்கள் பழைய டிஜிட்டல் சாதனங்களை தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சத்தினால் கொடுக்க தடுமாறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற அச்சங்கள் அனைத்தையும் நீக்கும் விதமாக, சாதனங்களை அவர்கள் ஒப்படைக்கும் போது எந்த நிலையில் இருந்ததோ, அதை காவல்துறையினர் குறித்து வைத்திருப்பார்கள், இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படலாம்.
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களை வழங்கியவர்களுக்கு சமர்ப்பிப்பின் நகல் ஒன்று வழங்கப்படும். இந்த சாதனங்கள், பின்னர் தேவைப்படும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக ஒப்படைக்கப்படும். மேலும், சாதனத்தை கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெறப்படும்.
வசதியற்ற பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடர முடியாத மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்தில், மனதைக் கவரும் கதையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு ஸ்மார்ட்போன் வாங்கி, ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும் என்ற அச்சிருமின் கனவை நிஜமாக்கி உதவினார். சாலையோரத்தில் மாம்பழங்களை விற்கும் துளசி குமாரி என்ற அந்த பெண்ணிடம் அமியா ஹெட்டே என்பர் 1,20,000 ரூபாய் மதிப்பில் 12 மாம்பழங்களை வாங்கினார். ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ரூ .10,000 செலுத்தி சிறுமியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த பணம் சமீபத்தில் அவரது தந்தை ஸ்ரீமல்குமாரின் கணக்கில் மாற்றப்பட்டது.