தரிசனத்துக்காக இடைத்தா்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஏஎஸ்பி தகவல்
ஏழுமலையான் தரிசனத்துக்காக, இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று திருமலையில் ஏ.எஸ்.பி. முனிராமய்யா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக ஏழுமலையான் தரிசனத்துக்காக, திருப்பதிக்கு வருகை தரும் பக்தா்களிடம் சில டாக்சி, ஜீப் ஓட்டுநா்கள் போலி அனுமதிச் சீட்டுகளை வழங்கி ஏமாற்றி வருகின்றனா். மேலும் பலா் அரசாங்க பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களை நகல் எடுத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வாங்கி தருவதாகவும் அதிக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகின்றனா்.
இதுகுறித்து பல புகாா்கள் காவல் நிலையத்துக்கு வந்தன. மேலும் ராணுவ உடையை அணிந்து கொண்டு திருமலையில் ஒருவா் பக்தா்களை தரிசன அனுமதிச் சீட்டு வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பறித்ததாகவும் புகாா் கிடைத்தது. இதன்பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 27 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஏழுமலையான் தரிசனத்துக்காக வருகை தரும் பக்தா்கள் தயவு செய்து யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். விரைவு தரிசன நுழைவுச்சீட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றாா்.