மனநலம் குன்றிய சிறுவனை அடித்துக் கொன்றதாக புகார்: எலும்புக்கூடு தோண்டி எடுப்பு
தமிழக மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவனை அடித்துக் கொன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திங்கள் கிழமை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும்போது எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில், அவிஸோ மனவளர்ச்சி குன்றியகாப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயது சிறுவனை முகமது ஷேக் அப்துல்லா அடித்தபோது இறந்ததால், காப்பகத்திலியே யாருக்கும் தெரியாமல் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும், மொழி தெரியாமல் வந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அப்பெண் இறந்ததாகவும், அவரது மனைவி கலிமா பீவி என்பவர் தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் திங்கள் கிழமை காப்பகத்தில் பொக்ளீன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது.
அப்போது கலிமா பீவி காட்டிய இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும்போது அங்கு எலும்புகூடு, மண்டை ஓடு ஆகியவை எடுக்கப்பட்டது.
இதையடுத்து எலும்புக்கூடை அதிகாரிகள் சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் சோதனைக்காக ஒப்படைத்தனர்.
மேலும், காவல்துறையினர் முகமது ஷேக் அப்துல்லா மற்றும் அங்குள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.