இணையவழிக் கல்வியில் அரசுக்குப் பெரும் தோல்வி யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டு.
மாணவர்களின் இணையவழிக் கல்வியில் அரசு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினாரா.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நடைமுறையில் உள்ள இணையவழிக் கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. அதற்கமைய இணையவழிக் கல்வியை நிறுத்துகின்றோம்.
மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனடிப்படையிலேயே மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது, பரீட்சைகளை் நடத்தி சாதரணமான நிலையில் அனைத்தும் உள்ளது என்று கூற அரசு முனைகின்றது.
மலையக மக்களது 1000 ரூபா சம்பளம் பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் அந்த மாணவர்களின் இணையவழிக் கல்வி சாத்தியமற்ற ஒன்று. இணைய வசதிகள் அற்ற நிலையில் மரத்திலும், கூரைகளிலும், மலைகளிலும் ஏறி ‘சிக்னல்’ பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது .இதில் மாணவர்களின் இணையவழிக் கல்வி என்பது 15 வீதமே சாத்தியமாகியுள்ளது” என்றார்.