புதிர் நிறைந்த ஹெய்ற்றி ஜொவனல் மொய்ஸ் படுகொலை : சண் தவராஜா

‘மேற்குலகின் மிக வறிய நாடு’ என அறியப்படும் ஹெய்ற்றியின் அரசுத் தலைவர் ஜொவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகர் போர்ட் ஒப் பிரின்ஸில் உள்ள அவரது தனிப்பட்ட வாசஸ்தலத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவைக் கடந்து இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
கறுப்பு உடையணிந்த ஆயுததாரிகள், அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் படைப்பிரிவினரைப் போன்று பாவனை செய்து கொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் அமெரிக்கப் பாணி ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் உரையாடியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் போது, அரசுத் தலைவர் இல்லத்தின் மேலாக ‘ட்ரோன்’ வகை விமானம் பறப்பில் ஈடுபட்டதாகவும், கைக்குண்டுச் சத்தம் கேட்டதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ள அரசுத் தலைவரின் இணையர் மார்ட்டினே மொய்ஸ் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களது பிள்ளைகள் மூவரும் காயங்கள் எதுவும் இன்றித் தப்பியுள்ளனர்.

தாக்குதல்தாரிகள் யார் என்ற விபரம் இந்தக் கட்டுரையை எழுதும் தருணம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், குறித்த தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது என்பதுவும், உள்ளக உதவி இன்றி தாக்குதல் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதுவும் மிகவும் உறுதியாகத் தெரிகின்றது. தாக்குதலாளிகள் அரசுத் தலைவரை மாத்திரமே இலக்குவைத்துக் கொலை செய்துள்ளனர். அவரின் இணையர் சில வேளைகளில் தாக்குதலாளிகளைத் தடுக்க முயன்ற போதில் காயங்களுக்கு இலக்காகியிருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது. அரசுத் தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களான காவல்துறையைச் சேர்ந்த மூவர் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசுத் தலைவரின் பணியாளர்கள் கூடப் பாதிக்கப்படவில்லை.

பிந்திய தகவல் கட்டுரைக்கு வலுச் சேர்ப்பதற்காக இணைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற கொலம்பிய வீரர்கள் உட்பட 28 வெளிநாட்டு கூலிப்படையினர் அடங்கிய குழு, இந்த வார தொடக்கத்தில் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸை படுகொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், 17 பேர்  கைதாகியுள்ளனர். சிலர் அவர்கள் பயன்படுத்தும் வீட்டிலும் , மற்றவர்கள் தைவானின் இராஜதந்திர வளாகத்திற்குள்ளும் நுழைந்த பின்னர் அங்கு வளைக்கப்பட்டு கைதாகினர்.

4 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்டனர், மேலும் எட்டு பேர் இன்னும் தேடப்படுகிறார்கள்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன், இரத்தக்களரி மற்றும் காயமடைந்த, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டனர்.

தாக்குதலை யார் ஏற்பாடு செய்தார்கள், என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தகவல் முடிந்து கட்டுரை தொடர்கிறது .....

தாக்குதல் இடம்பெற்ற அரசுத் தலைவரின் இல்லம் ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. பிரமுகர்களும், செல்வந்தர்களும் வசிக்கும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று வருவதெற்கென ஒரேயொரு சாலையே உள்ளது. அந்தச் சாலை கூட 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய படையினரின் காவல்உலாவுக்கு உட்பட்டது. இருந்தும் தாக்குதலாளிகள் தங்குதடையின்றி அரசுத் தலைவரின் பிரத்தியேக இல்லம் வரை செல்ல முடிந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி, நள்ளிரவைத் தாண்டி ஒரு மணியளவில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினர் அதிகாலையிலேயெ சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு முன்னதாகவே ஊடகவியலாளர்கள் அதிபர் மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

வியாழக்கிழமை ஊடகங்களுடன் பேசிய காவல்துறை தலைமை அதிகாரி லெயோன் சார்லஸ், தாக்குதல்தாரிகளில் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் ஹெய்ற்றிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பிரசை எனத் தெரிய வருகின்றது.

53 வயதான மொய்ஸ் ஒன்றும் ஹெய்ற்றி மக்களின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர் அல்ல. அவரது பதவிக் காலம் கூட கேள்விக் குறியானதாகவே இருந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு அவர் முதல் தடவையாக அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது, மோசடிக் குற்றச்சாட்டில் தேர்தல் முடிவுகள் வறிதாக்கப்பட்டன. அடுத்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்ற போது 11 மில்லியன் மக்கட்தெகையைக் கொண்ட ஹெய்ற்றியின் 23 வீதமான மக்களே தேர்தலில் பங்கு கொண்டிருந்தனர். சட்டப்படி இவ்வருடம் பெப்ரவரி மாதத்துடன் அவரின் பதவிக் காலம் முடிவடையும் போதிலும், அதனை ஏற்றுக் கொள்ளாத மொய்ஸ், 2022 வரை தனது பதவிக் காலம் உள்ளதாகக் கூறி வந்தார்.

சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதில் குறியாகச் செயற்பட்ட அவர் 2017 ஆம் ஆண்டு முதல் 6 தலைமை அமைச்சர்களை நியமித்துள்ளார். தற்போது பதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிளவ்டே யோசப் அவர்களைக் கூடப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஏரியல் ஹென்றி என்பவரைப் புதிய தலைமை அமைச்சராக நியமிக்கும் உத்தரவை இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன்னரேயே மொய்ஸ் வெளியிட்டிருந்தார். புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை அமைச்சர் முறைப்படி பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னரேயே அரசுத் தலைவர் கொலை செய்யப்பட்டு விட்டதால், யார் உண்மையான பொறுப்பை ஏற்பது என்பதில் கூடச் சிக்கல் உருவாகியுள்ளது. இருவருமே தான்தான் பதில் அரசுத் தலைவர் எனக் கூறி வருகின்றனர்.

ஹெய்ற்றியின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், அரசுத் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்படும் போது அப்பொறுப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் ஏற்க வேண்டும். ஆனால், துர்வாய்ப்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரெனே சில்வெஸ்றே யூன் 23ஆம் திகதி கொரோனாத் தொற்று காரணமாக மரணத்தைத் தழுவியிருந்தார். அவரது வெற்றிடம் நிரப்பப்படுவதற்கு முன்னரேயே மொய்ஸ் புதிய அரசியலமைப்புச் சிக்கல் ஒன்றுக்கு வழியமைத்துவிட்டு மரணத்தைத் தழுவியுள்ளார்.

தலைப்புச் செய்திகளில் ஹெய்ற்றி இடம்பிடிப்பது – அண்மைக் காலத்தில் – இது முதற் தடவையல்ல. 2000மாம் ஆண்டில் அந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் காரணமாக 2 இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டதுடன், தலைநகர் போர்ட் ஒப் பிரின்ஸ் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சிதைவுண்டு போயின. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 59 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ள அந்த நாட்டில் 2004 முதல் 2017 வரை தங்கியிருந்த ஐ.நா. சமாதானப் படையினரால் பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாகச் குற்றஞ்சாட்டப்பட்டது. அது மட்டுமன்றி, அக் காலப்பகுதியில் சமாதானப் படையினரிடம் இருந்து பரவிய வாந்திபேதி நோயினால் சுமார் பத்தாயிரம் வரையான பொதுமக்களும் இறக்க நேரிட்டது.

பல தசாப்தங்களாக ஹெய்ற்றி மக்கள் நிம்மதியான வாழ்வைத் தொலைத்தவர்களாக வாழ நேர்ந்திருக்கின்றது. 1986க்கு முந்திய மூன்று தசாப்த காலம் டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கீழ் வாழ்ந்த மக்கள், அதே வருடத்தில் நிகழ்ந்த மக்கள் புரட்சி மூலம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். அதன் பின்னான காலப்பகுதியில் – 1995இல் – ஊழல் மலிந்திருந்த ஹெய்ற்றியின் இராணுவப் படை கலைக்கப்பட்டது. பின்னாளில் இராணுவப் படை மீளக் கட்டியமைக்கப்பட்ட போதிலும், அதனை ஊழல் மலிந்த, மக்கள் விரோத இராணுவப் படையாகக் கட்டியெழுப்புவதிலேயே அரச அதிபர்கள் குறியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மொய்ஸ் கொலை செய்யப்பட்டமையை உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஐ.நா. பாதுகாப்புச் சபையும் இதனைக் கண்டித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே தாமதமான நாடாளுமன்றத் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்க வேண்டும் என அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொய்ஸ் அவர்களின் ஊழல் மலிந்த ஆட்சியின் மீதும், கொரோனாக் கொள்ளைநோய்த் தடுப்பில் அவர் காட்டிய அலட்சியம் தொடர்பிலும் ஆத்திரம் கொண்டிருந்த மக்கள் தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே அவரின் கொலை இடம்பெற்று உள்ளது. ஒரு வகையில் இது சாதகமாக நோக்கப்பட்டாலும், அவரின் தலைமையின் கீழ் பணியாற்றிய ஒருவர் தற்காலிக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் எதிர்காலம் என்னவாக அமையும் என்ற அச்சமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் நிம்மதியான வாழ்க்கைக்காகவே ஏங்கி வருகின்றனர். பலருக்கு அது வாய்த்த போதும், ஹெய்ற்றி போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இந்த நிலை என்று மாறுமோ?

Leave A Reply

Your email address will not be published.