யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்.
இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு மற்றும் பிரமந்தனாறு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி வீண் விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளுகின்ற திட்டத்தினை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.
குறித்த திட்டமானது 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் செயற்படுத்தலுக்கான முன்மொழிவுகள் ஆராயப்பட்ட போதிலும், ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆனையிறவு கடல் நீரேரியில் 23 வீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான முன்மொழிவானது ஆராயப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி, கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்பாசனப் பணிப்பாளர் த. இராஜகோபு அவர்கள் முன்மொழிவு தொடர்பில் விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார்.