வாய்ச்சவடாலை நிறுத்திவிட்டு பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
“வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வாய்ச்சவடாலை நிறுத்திவிட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் எரிபொருள் விலை மேலும் அதிகரித்திருக்கும் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அவர் இதனை சாரம் அணிந்துக்கொண்டுதான் கூறினாரா எனக் கேட்கின்றேன்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 19 டொலராகக் குறைந்தபோது, எரிபொருள் விலை குறைந்திருக்க வேண்டும். 50 ரூபாவுக்குக் குறைந்திருக்க வேண்டும். எரிபொருள் விலையைக் குறைத்தார்களா?
அதேபோன்று கடந்த வருடம் ஒரு பீப்பாய் எண்ணெயின் சாதாரண விலை டொலர் 45.5 ஆகக் காணப்பட்டது. இதன்போதேனும் எரிபொருள் விலையைக் குறைத்தார்களா? எரிபொருள் விலையைக் குறைக்காது டொலர் 64ஆக உயர்வடைந்தபோது எரிபொருள் விலையை அதிகரித்துள்ளனர்.
வருட இறுதியில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை டொலர் 100ஆக அதிகரிக்கப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையுடன் உலக நாடுகள் திறக்கப்படும்போது, விமான நிலையங்கள் திறக்கப்படும்போது, உலக மக்களின் வாழ்வாதார நிலைமை சாதாரண நிலையை அடையும்போது, நுகர்வு அதிகரிக்கும்போது எரிபொருள் விலை அதிகரிகப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மேலும் 154 ரூபாவால் எரிபொருள் விலையை அதிகரிக்கப் போகின்றீர்களா எனக் கேட்க விளைகின்றேன்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தபோது குறைக்காது எரிபொருள் விலை அதிகரித்தப் பின் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதற்காக எதிர்பார்த்துள்ளனர்.
எரிபொருள் விலை குறையும்போது குறைப்பதற்கும் கூடும்போது கூட்டுவதற்குமே எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தினோம்.
விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் குறைந்த விலைக்கு எரிபொருள்களை விநியோகித்திருக்கலாம். எனவே, எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் கதைக்காது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு உதய கம்மன்பில தயாராக வேண்டும். அவரின் வாய்ச்சவடால் இனிமேல் வேகாது” – என்றார்.