அரச அராஜகங்களைக் கண்டித்து 4ஆவது நாளாகவும் தொடர்கின்றது ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம்!
இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த 12ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையிலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
24 ஆண்டுகளாகக் காணப்படும் அதிபர், ஆசிரியர்களுக்காகச் சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசுகளுக்கும் தெரியப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்
மேலும், காலம் தாழ்த்தாது, தமது பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்குப் பேச்சுகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
45 இலட்சம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளமை தொடர்பில் அரசு இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை என்று கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் கூறியுள்ளார்.
இதனால் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.