கர்ப்பிணிகளுக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை
கேரளாவில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கேரளத்தில் ஜிகா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இருவர் அனயாரா என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் கன்னுகுழி, பட்டோம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அவரது மாதிரிகள் ஆழப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், வைரஸ் பரவல் குறித்து பல்வேறு அரசு அலுவலர்களுடனான சந்திப்பு பிறகு செய்தியளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தற்போது 8 பேர் மட்டுமே ஜிகா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மூன்று பேர் கர்ப்பிணிகள். திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டுமே இந்த வைரஸ் காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் ஜிகா வைரஸ் இல்லை.
நாங்கள் மாநிலம் முழுவதும் பரிசோதனையை விரிவுபடுத்தவிருக்கிறோம். கர்ப்பிணிகள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார். மற்ற பகுதிகளுக்கு ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க அனயாரா பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.