கப்பல் தீ விபத்து குறித்த விசாரணை ஒத்திவைப்பு.
‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து, அதன் முன்னேற்றங்களை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
விசாரணை அதிகாரிகளால் கோரப்பட்ட கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்திடம் காணப்பட்ட அனைத்து கணினி தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன என்று குறித்த நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனிடையே, நேற்றைய (15) வழக்கு விசாரணையின்போது கப்பலின் கப்டன், கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிலையத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட நிறுவனத்தின் பிரதம அதிகாரிகள் சிலரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.