கொரோனா சிகிச்சையாளர்களுக்கு பியர் கொடுக்க வந்தோர் மாட்டினர்

யாழ். வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் கைதுசெய்ய வட்டுக்கோட்டை பொலிஸார் ஆரம்பத்தில் பின்னடித்த நிலையில் பின்னர் அவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கவென பியர் ரின்களுடன் இருவர் சிகிச்சை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களைப் பொலிஸாரிடம் கையளித்த போதிலும் , அவர்களுக்குக் கொரோனாத் தொற்று இருக்கும் என அச்சம் காரணமாக பொலிஸார் அவர்களைக் கைதுசெய்வதற்கு ஆரம்பத்தில் பின்னடித்தனர். பின்னர் அவர்களைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதேவேளை, கடந்த வாரமும் இருவர் வெற்றிலைகளுடன் குறித்த சிகிச்சை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தபோதும் அவர்களை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்ட போதிலும் அவர்களைப் பொலிஸார் கைதுசெய்யப் பின்னடித்தமையால் அவர்கள் அன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த இருவரும் அன்றைய தினம் வெற்றிலைகளுடன் கஞ்சா போதைப்பொருளைக் கொண்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.