ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டு தகவல்களைத் திருடி நூதனக் கொள்ளை: 3 பேர் சிக்கியது எப்படி
சென்னையில் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களைத் திருடி அதன் மூலம் பணத்தைத் திருடும் கும்பல் குறித்து அடையாறு போலீசாருக்கு ரகசியத தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் அடையாறு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
காரில், திருச்சியைச் சேர்ந்த 32 வயதான லாவா சந்தான், புதுவையைச் சேர்ந்த 30 வயதான பிரவின் கிஷோர், திண்டுக்கலைச் சேர்ந்த 37 வயதான சிக்கந்தர் பாதுசா, 29 வயதான பிரவின்குமார் ஆகிய நான்கு பேர் இருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை முழுமையாக சோதனை செய்தனர்.
காரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்கிம்மர் கருவி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், நான்கு பேரையும் கைது செய்து கானத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நான்கு பேரையும் விசாரணை செய்ததில் இலங்கையை பூர்வீகமாக் கொண்ட லாவா சந்தன் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017ம் ஆண்டு கூட்டாளிகளுடன் கைது செய்திருப்பதும், பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு குற்றவாளியான சிக்கந்தர் என்பவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வேலை பார்த்து வந்ததும், அங்கு வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியதும் தெரியவந்தது.
பின்னர் அந்த தகவல்களை வைத்து போலியான ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் திருடிய பணம் குறித்து விசாரித்த போது, பிட் காயின் போன்ற ஆன்லைனில் வர்த்தகத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். கைதான நான்கு பேரிடமிருந்து 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவி, லேப்டாப், செல்ஃபோன் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கைதான நான்கு பேரில் பிரவின்குமார் என்பவர் ஓட்டுநராக வந்ததால் அவர் மீது கானத்தூர் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர்.
லாவா சந்தன், பிரவின் கிஷோர், சிக்கந்தர் பாதுசா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சைதாப்பேட்டை குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.