கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு இலவச பிரியாணி- தொழிலதிபரின் முயற்சி
கொரோனா பேரிடரின் காரணமாக சி.பி.எஸ்.சி வழிக் கல்வியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைப் பின்பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டன.
இருப்பினும், கேரளாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் 10-ம் வகுப்பு தேர்வுகளை அம்மாநில அரசு நடத்தியது. அந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கேரளாவில் இந்த ஆண்டு 4.19 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுகள் எழுதினார்கள். அதில், 99.47 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். அதில், 2,236 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாததால் தேர்வுகள் எளிமையாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு எளிமையாக இருந்தும் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்யும்போது சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், கற்கும் திறன் குறைந்தவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
எளிமையான முறையில் தேர்வு நடத்தப்பட்ட போதிலும் கேரளாவில் தேர்ச்சியடைபவர்களின் விகிதம் அதிகரிக்கவில்லை. மாறாக, ஏபிளஸ் மதிப்பெண்ணைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் சில தொழிலதிபர்கள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்த சுதீஷ் என்பவர், தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் தங்கும் விடுதிகளை நடத்திவருகிறார்.
அவர், 10-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அவரது விடுதிகளில் இலவசமாக தங்குவதற்கு சலுகைகளை வழங்கியுள்ளார். கேரளாவில் கொச்சிப் பகுதியில் பிரியாணி கடை நடத்துபவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு குழிமந்தி பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த சுதிஷ், ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிவருகின்றனர். இந்த நேரத்தில் தோல்வியடைந்தவர்கள் மனநிலை குறித்து யோசித்துப் பார்க்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் எனக்கு போன் செய்துள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த ஆழப்புலா மாவட்ட பள்ளி ஆசிரியர், ‘எனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தோல்வியடைந்த பல மாணவர்கள் பொருளாதார பின்புலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.