சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்.
தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும், இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் அன்னை இல்ல வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முதல் அம்சமாக மங்கள விளக்கேற்றலுடன் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்தார். தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் புலவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
மேலும் அன்னை இல்லத்தின் மாணவர்களுக்கு அரசாங்க அதிபரினால் அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்னை இல்லத்தின் நிர்வாகி, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள் மற்றும் அன்னை இல்லத்தின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பெரியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.