மலையக சிறுமி மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஜீவன் வலியுறுத்து.
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் 16 வயது மலையக சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் உட்பட அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் இல்லத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.