டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சிறுமியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியும் ஹட்டன் நகரில் இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயச்சந்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், மலையகத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.