இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.