ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு கார் மற்றும் மினிடெம்போவில் கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் மற்றும் மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீசார் இன்று காரிப்பட்டி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் மினி டெம்போவை மறித்து சோதனை நடத்தியதில் இரண்டு வாகனங்களில் 400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் கருமந்துறையைச் சேர்ந்த வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்த ஆண்டிச்சாமி, தனபாக்கியம், அழகேசன் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ கஞ்சாவின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சப்ளை செய்வதை தொழிலாக கொண்ட இந்த கும்பல், யார் யாருக்கு எல்லாம் கஞ்சாவை சப்ளை செய்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகிறது.