விவசாயிகள் பிரச்னை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் முடிவு
விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவரும் என்று புரட்சிகர சோஷலிஸ கட்சி (ஆா்எஸ்பி) எம்.பி. என்.கே. பிரேமசந்திரன் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவுள்ளதையொட்டி மத்திய அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகள் மட்டும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனியிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிவசேனை, ஆம் ஆத்மி, ஆா்எஸ்பி கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து ஆா்எஸ்பி எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் விலை உயா்வு ஆகியவைதான் தற்போதைய முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும். விவசாயிகள் பிரச்னை தொடா்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல எதிா்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவரும்’’ என்று தெரிவித்தாா்.
தங்கள் கட்சித் தலைவா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடா்பாகவும் அவா்கள் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.