A/L பரீட்சை: நவம்பர் 15; புலமைப்பரிசில் பரீட்சை: நவம்பர் 14
வருடாந்தம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பரில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய 2021 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15 – டிசம்பர் 10 வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 14 இல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வியமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் குறித்த இரு பரீட்சைகளையும் எதிர்வரும் ஒக்டோபரில் நடாத்த, கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டதாக, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.
உயர் தரப் பரீட்சையை நடாத்துவதில் மாணவர்களிடையே இரு கருத்து நிலவுதாக, அண்மையில் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.
பாடத்திட்டத்தை முடிப்பது கடினம் என்பதால் பரீட்சைகளை ஒத்திவைப்பதே பொருத்தமானது என பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றும் மாணவர்களும், தாமதமின்றி ஒக்டோபர் மாதத்திலேயே பரீட்சைகளை நடத்த வேண்டுமென இரண்டாவது முறையாக தோற்றும் மாணவர்களும் கருத்துகளை தெரிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே பரீட்சைகளின் திகதிகள் இன்று அறிவிக்க்பபட்டுள்ளன.
இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சைகளின் பிரயோக பரீட்சைகளை ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 08 வரை நடாத்த தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.